லகிலேயே முதல் நாடாக நம் இந்தியா நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்ய, இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ) கடந்த ஜூலை மாதம் "சந்திராயன்-2' (நிலவின் பயணம்) என்னும் விண்கலத்தை நிலவுக்கு அனுப்பியது.

விண்கலத்தை நிலவில் தரையிறக்கி ஆய்வு செய்யவேண்டுமென 2008-ல் இஸ்ரோ முடிவுசெய்தது. அவ்வாண்டே "சந்திராயன்-1' விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது. தற்போதைய "சந்திராயன்-2' விண்கலம் பூமியிலிருந்து சுமார் 3.84 லட்சம் கிலோமீட்டர் தூரம்வரை வெற்றிகரமாகப் பயணித்து உலகநாடுகளை இந்தியா பக்கம் திரும்பிப் பார்க்கச் செய்தது. கோள்களைப் பற்றி நம் முன்னோர்களான ரிஷிகள், சித்தர்கள், அறிவியல் அறிஞர்கள், வானசாஸ்திர வல்லுநர்கள் எனப் பலரும், அறிவியல் தொழில்நுட்பம் வளர்ச்சியடையாத அந்த காலத்திலேயே ஆராய்ந்துள்ளனர். இது உலக அரங்கில் இந்தியாவுக்கு மட்டுமே பெருமைதரக்கூடிய நல்ல விஷயமாகும்.

சூரியனை இயற்கை தெய்வமாக நினைத்து வழிபட்ட நம் முன்னோர்கள், சூரியனிடமிருந்து வெளிச்சத்தைப் பெற்று, அதை இரவில் வெளிச்சமாகவும் குளிர்ச்சியாகவும் தரும் சந்திரனையும் இயற்கை தெய்வமாக வழிபட்டனர்.

மூன்றாம் பிறையைப் பார்த்து வணங்குதல் என்பது நம் சம்பிரதாயம். சுக்கில பட்ச (வளர்பிறை) துவிதியையன்று மாலையில்-

Advertisment

"கதாயுததரம் தேவம்

சுவேதவர்ணம் நிசாகரம்

த்யோயேத் அம்ருத ஸம்பூதம்

Advertisment

ஸ்ர்வகாம பலப்ரதம்'

என்னும் சுலோகத்தைச் சொல்லி சந்திரனின் மூன்றாம் பிறையைப் பார்த்து வணங்கினால் தோஷம், பாவங்கள் நீங்கி மனதில் மகிழ்ச்சி ஏற்படும்.

இதேபோன்று இஸ்லாமியர்கள் ரமலான் புனித மாதத்தில் பிறையைப் பார்த்து வணங்கிய பின்னர்தான் பண்டிகை யைக் கொண்டாடுவார்கள்.

சந்திர கிரகணத்தன்று சந்திரனைப் பாம்பு விழுங்குவதாக பண்டைய சுவாரஸ்யமான கற்பனைக் கதை ஒன்று நம்மிடம் நிலவிவந்தது. இதுபற்றி கலித்தொகையில், "பால்மதி சேர்ந்த அரவினைக் கோள் விழுங்கும்' என்னும் வரிவருகிறது.

தில்லைநாயகப் புலவர் எழுதிய "சாதக சிந்தாமணி' என்னும் ஜோதிட நூல் சந்திரனின் மற்ற பெயர்களை வரிசைப்படுத்தியுள்ளது.

"மதிஇராக் கதிரோன் நிசாபதி களங்கன்

வளர்பிறை அம்புலி அல்லோன்

விதுவொரு சோமன் உடுபதித் திங்கள்

வெண்கதிர்க் கடவுள் வெண்நிலவும்

புதுமுயற் கூடு சசிகலா நிதியோன்

புனர்சென்மன் புகலுறும் அலவன்

அதிகதன் ணவனாம் குரங்கியோ டிந்து

அரிச்சகன் சந்திர னாமே.'

இதில் மதி, இராக் கதிரோன், நிசாபதி, களங்கன், வளர்பிறை, அல்லோன், விது, சோமன், உடுபதி, திங்கள், வெண்கதிர், கடவுள், வெண்ணிலவு, முயற்கூடு, சசி, கலாநிதி, புனர்சென்மன், அலவன், தண்ணவன், குரங்கி, இந்து, அரிச்சிகன் என்பன சந்திரனின் பெயர்கள் எனப் பாடப்பட்டுள்ளது.

kk

பூமியின் துணைக்கோளான சந்திரன் சுமார் 27,38,800 மைல் தூரத்திற்கு அப்பால் பூமியைச் சுற்றிவருகிறது என "அபிதான சிந்தாமணி' என்னும் நூல் தெரிவிக்கிறது. சந்திரன் பூமியைச் சுற்றிவர 27 3/4 நாட்கள் ஆகின்றன. ஒரு முழுநிலவிலிருந்து மறு முழுநிலவுவரை ஆகும் காலம் சுமார் 29 1/2 நாட்கள் என அறிவியல் நமக்குத் தெரிவிக்கிறது. இந்து மதத்தின் கோட்பாட் டின்படி 30 நாட்களில் (ஒரு மாதம்) 15 நாட்கள் வளர்பிறைத் திதி, 15 நாட்கள் தேய்பிறைத் திதி என பிரிக்கப்பட்டுள்ளது. இதைத்தான் கிருஷ்ண பட்சம், சுக்கில பட்சம் எனக் கூறுவார்கள்.

சந்திரன் பூமியைச் சுற்றிவர ஆகும் கால மான 27 3/4 நாட்களை நம் முன்னோர்கள் 27 நட்சத்திரங்கள் எனக் குறித்துள்ளனர்.

அவை முறையே, அஸ்வினி, பரணி, கார்த்திகை, ரோகிணி, மிருகசீரிடம், திருவாதிரை, புனர்பூசம், பூசம், ஆயில்யம், மகம், பூரம், உத்திரம், ஹஸ்தம், சித்திரை, சுவாதி, விசாகம், அனுஷம், கேட்டை, மூலம், பூராடம், உத்திராடம், திருவோணம், அவிட்டம், சதயம், பூரட்டாதி, உத்திரட் டாதி, ரேவதி என்பனவாகும். நம்முடைய பழங்காலப் புராணங்கள் அழகும், என்றும் குன்றாத இளமையும் வாய்ந்த சந்திரன் 27 பெண்களை திருமணம் செய்து கொண்டான் என்று தெரிவிக்கிறது. நம் முன்னோர்களின் அறிவியல் சிந்தனையை என்னவென்று சொல்வது?

திருப்பாற்கடலைக் கடையும்போது வெளிப்பட்ட சந்திரன் 15 நாட்கள் வளர்ந்தும், 15 நாட்கள் தேய்ந்தும் போவதற்குக் காரணம் தட்சன் கொடுத்த சாபமென சிவபுராணம் தெரிவிக்கிறது. பிள்ளையாரைப் பழித்ததால் ஏற்பட்ட சாபம் என்றும் சிலர் கூறுவார்கள். வசீகரமான தோற்றம் வாய்ந்த சந்திரனுக்கு தட்சன் தன்னுடைய 27 பெண்களைத் திருமணம் செய்துகொடுத்தான். சந்திரன் தம் மனைவிகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்துவந்தான். காலப்போக்கில் 27 மனைவிகளில் ரோகிணி என்னும் மனைவியிடம் மட்டும் அதிகப் பிரியம் கொண்டு, மற்றவர்களை ஒதுக்கத் தொடங்கினான். இதனால் பாதிக்கப்பட்ட 26 பெண்களும் தந்தையான தட்சனிடம் முறையிட, அவனும் சந்திரனை சமாதானப் படுத்தி எல்லாரிடமும் சமமாக நடந்து கொள்ளுமாறு அறிவுரை கூறினான்.

ஆயினும் சந்திரனின் குணம் மறைவில்லை. இதனால் கோபப்பட்ட தட்சன், சந்திரன் தேய்ந்து மறைந்து போகுமாறு சாபமிட் டான். மாமனாரின் சாபத்தால் சந்திரனின் அழகு நாளுக்கு நாள் குறைந்துகொண்டே இருந்தது. ஒளியும் அழகும் இழந்த சந்திரனை யாரும் மதிக்கவில்லை. தன் தவறை அப்போதுதான் உணர்ந்த சந்திரன் சாபவிமோசனம் பெற சிவபெருமானை வேண்டிக் கடுந்தவம் புரிந்தான். அதன் பயனாக சிவபெருமான் சந்திரனிடம், ""நீ பெற்ற சாபத்திற்கு மாற்றாக ஒரு உபாயம் சொல்கிறேன். அதன் படி ஒரு மாதத்தில், 15 நாட்கள் கொண்ட ஒரு பட்சத்தில் உனது கலைகள் குறையவும், அடுத்த 15 நாட்கள் கொண்ட ஒரு பட்சத்தில் வளரவும் அருள்புரிகிறேன்'' எனக் கூறினார்.

இதனால் மகிழ்ச்சியடைந்த சந்திரன் சிவபெருமானிடம், தனது பெயரில் பூவுலகில் எழுந்தருள வேண்டுமென மீண்டும் வேண்டினான்.

ஈசனும் அவ்வாறே அருளினார்.

சந்திரன் பிரபாஸ க்ஷேத்திரத்தில் சந்திரகுண்டம் என்கிற ஒரு குளத்தை (தீர்த்தம்) உண்டாக்கினான். அங்கு பன்னிரண்டு ஜோதிர் லிங்கங்களில் ஒன்றான சோமேஸ்வர லிங்கத்தை பிரதிஷ்டை செய்தான். இது தற்சமயம் குஜராத் மாநிலத்தில், அரபிக்கடல் ஓரத்தில் உள்ளது. காலப்போக்கில் இஸ்லாமிய தீவிரவாதிகளால் அழிக்கப் பட்டு, பின்னர் சீர்செய்யப்பட்டது. தமிழ்நாட்டில் சந்திரனுக்குரிய பரிகாரத் தலம் தஞ்சை மாவட்டத்தில் திங்களூரில் உள்ளது. பெரியநாயகி சமேத கைலாசநாதர் திருக்கோவில், தேவார வைப்புத் தலம். இக்கோவிலின் தீர்த்தத்தின் பெயர் சந்திர புஷ்கரணி.

அப்பூதியடிகள் நாயனார் அவதரித்த இடம் இதுவென்பதை-

"துங்கமிகு திங்களூர் வாழ்நான் மறைநெறிச்

சொற்பயிலும் அப்பூதியார்'

எனத் தொடங்கும் திருத்தொண்டர் சதகம்மூலம் அறியலாம்.

இப்படி இறைவனின் அம்சமாக வழிபடப்படும் சந்திரனைப் பற்றி உலகளவில் பல விண்வெளி ஆராய்ச்சிகள் நடத்தப்பட்டன. சந்திரனுக்கு மனிதன் செல்வது எப்படி? அங்கு மனித இனம் வாழ முடியுமா? சந்திரனில் நீர் இருக்கிறதா என்கிறரீதியில் ஆராய்ச்சிகள் தொடர்ந்தன. அமெரிக்காவைச் சேர்ந்த விண்வெளி வீரர் நீல் ஆம்ஸ்ட்ராங் 1969-ஆம் ஆண்டு சந்திரனில் முதன்முதலில் கால்பதித்தார். அவரைத் தொடர்ந்து அன்றே மற்றொரு வீரரான எட்வின் ஆல்ட்ரின் கால் பதித்தார். அதன்பின்னர் தொடர்ந்து பல ஆராய்ச்சிகள் நடந்துகொண்டே இருக்கின்றன.

அறிவியல் அடிப்படையிலும் ஆன்மிக அடிப்படையிலும் சந்திரன் ஒரு முக்கிய கதாபாத்திரமே. மூன்றாம் பிறையை சிவபெருமான் தன் தலையில் சூடிக்கொண்டதால் அவருக்கு சந்திரமௌலீஸ்வரர் என்னும் பெயர் ஏற்பட்டது. இதை சுந்தரமூர்த்தி சுவாமிகள், "பித்தா பிறைசூடி பெரு மானேயரு ளாளா' எனப் பாடினார். அம்பிகையும், பிள்ளையாரும் இதேபோன்று மூன்றாம்பிறைச் சந்திரனை தலையில் சூடிக்கொண்டனர். தெய்வீகமான பிறையான மூன்றாம் பிறையைப் பார்த்தால் மனதில் மகிழ்ச்சியும் கூடும்; பார்வைக் கோளாறு இருந்தால் அது நீங்கும் என்பது நம்பிக்கை. அதேசமயம் நான்காம் பிறையைப் பார்க்கக்கூடாது என்பார்கள். "நாலாவது பிறை பார்த்தால் நாய்பட்ட பாடு' என்னும் வழக்குச் சொல்லும் உண்டு.

ஆயிரம் மூன்றாம் பிறையை தரிசனம் செய்தவர்களுக்கு சதாபிஷேகம் (80 வயது நிறைவு) கொண்டாடுவார்கள்.

சந்திரனை வணங்கி வாழ்வில் மகிழ்ச்சியையும், ஞானத்தையும் பெறுவோம். இக்கட்டுரை படிப்பவர்கள் எல்லாரும் சந்திரனின் அருளால் ஆயிரம் பிறை கண்டு, சதாபிஷேகத்தைக் கொண்டாடி மகிழ்வுடன் வாழப் பிரார்த்திக்கிறோம்.